குழந்தைகளின் வாழ்வை சிறுவயதிலேயே பறிக்கும் போலியோ என்ற முடக்குவாத நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை செய்ய மறுத்து விட்டார். காரணம், "சூரியனுக்கே காப்புரிமை பெறுவது போன்ற செயல் அது" என்று கூறினார்.
ஆனால் இன்று உலகம் முழுதும் மனிதர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கும் ஸ்வைன் ஃளூ என்ற காய்ச்சல, கொள்ளை நோயாக பரவி வரும் வேளையில் நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டிய அறவியல் ரீதியான கட்டாயம் ஏற்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ ஸ்வைன் ஃப்ளூவிற்கு எதிராக கொடுக்கப்படும் டாமிஃப்ளூ என்ற வணிக முத்திரையில் விற்கப்படும் ரோச் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மருந்தின் மூலப்பொருளை உற்பத்தி செய்து அந்த மருந்தை எளிதில் குறைந்த விலைக்கு கிடைக்குமாறு செய்ய ஏன் முடியவில்லை?
ஏனெனில் இந்த மருந்தை கண்டுபிடித்ததாகக் கூறும் ரோச் நிறுவனம் அதன் காப்புரிமையை வைத்துள்ளது. மிகப்பெரிய கொள்ளை நோயாக ஸ்வைன் ஃப்ளூ உருவாகி வரும் வேளையிலும் உலக சுகாதார அமைப்பு இந்த காப்புரிமை என்ற லாப வேட்டைக் குறிக்கோளை தளர்த்த முயலவில்லை.
நாம் வாழும் இன்றைய உலகின் மிகப்பெரிய மோசடி என்னவெனில், உயிரைக் காப்பாற்றக்கூடிய எந்த ஒரு மருந்தையும் ஏழை நாடுகள் தாங்களாகவே தயாரித்து சுய நிறைவு எய்த முடியாது என்பதே.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள வசதிகளின் படி டாமிஃப்ளூவை இன்று குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உற்பத்தி செய்யக்கூடாது என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. ஏனெனில் பண்ணாட்டு நிறுவங்களின் காப்புரிமையையும், லாப நோக்கையும் காப்பதுதான் அதன் பணி! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஸ்வைன் ஃப்ளூ ஒரு மக்கள் தொகை அழிப்பு எந்திரமாக உருமாறி வருவதிலிருந்து ஏழை நாடுகள் தப்பிப்பதற்கான மாற்று வழி இருந்தும் அதனை நாம் செய்து மக்களை இந்த கொடிய நோயிலிருந்து காப்பற்ற முடியாச சூழ்நிலையில் வாழ்கிறோம்.
மும்பை, புனே போன்ற பகுதிகளில் டாமிஃப்ளூ கள்ளச்சந்தையில் நாம் கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்கப்படுவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகம். அரசு மருத்துவமனையிலிருந்து பேராசை பிடித்த சில சக்திகள் டாமிஃப்ளூவை எடுத்து வெளியில் விற்கும் ஒரு போக்கையே இது காண்பிக்கிறது.
இந்த நிலையில் டாமிஃப்ளூவின் உட்பொருளை அந்தந்த நாடுகளே தயாரித்து அதனை வணிக முத்திரையற்ற மூலப்பெயரில் விற்கும் உரிமையை வலியுறுத்துவது உலக நாடுகளின் கடமையாகும்.
ஏழை நாடுகளுக்கு ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவி உயிர் பலி பெரிய அளவிற்கு ஏற்படக்கூடும் என்று சில மாதங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்த உலகச் சுகாதார அமைப்பு, ஏன் அதற்கு தீர்வாக அமையும் ஒரு மருந்தினை அந்த நாடுகள் தயாரிக்க அனுமதிக்கவில்லை?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக